Monday, February 18, 2013

இஞ்சித்தேன். அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி




சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.  பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும். 

காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.

முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும். 

பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.

எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது. 

தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. 

அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி

அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.  இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.

இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.

No comments:

Post a Comment