Monday, February 25, 2013

இராஜராஜ சோழன் - தஞ்சை பெரிய கோயில்


'உதகையைத் தீ உய்த்த உரவோன்..'

'என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.

இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போரிலேயே சும்மா அதகளப்படுத்திட்டார்ல!! 'வீண் சண்டைக்குப் போறதில்லை; வர சண்டையை விடுவதில்லை' என்ற நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் கொள்கை இராஜராஜ சோழனிலிருந்து தான் தொடங்கி இருக்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரிற்கு, "காந்தளூர்ச்சாலைப் போர்" என பெயர். அது வரை இருமுடிச் சோழர்களாக இருந்தவர்கள், இராஜராஜ சோழனால் மும்முடிச் சோழர்களாக உயர்ந்தனர். மூவேந்தர்களின் முடியையும் தன் வசமாக்கிய முதல் சோழன் இராஜராஜ சோழன். பின் புலி வாலைப் பிடித்த கதையாக வேங்கி (ஆந்திரா), கன்னட நாடு, சாளுக்கிய நாடு, இலங்கை, கலிங்க நாடு என ஒரு கை பார்த்த இராஜராஜ சோழனின் இறுதிப் போர் வ.பி. 1044ல் நிகழ்ந்தது. பாணராஜா, போகதேவன் என இரு மன்னர்களை வ்ரட்டி, "முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்" என்றழைக்கப்பட்ட தற்போதைய மாலத்தீவு (Maldives)-ஐக் கைப்பற்றினார் இராஜராஜ சோழன். கப்பற்படையில் சிறந்து விளங்கிய பிற்கால சோழர்களின் (அதாவது கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம்) முன்னோட்டமாக இப்போர் அமைந்தது. சீனா,  சுமத்ரா, இலங்கை, நிக்கோபர் போன்ற நாடுகளுடன் சீரான வாணிபத்தை மேற்கொண்டுள்ளது சோழ நாடு. சீனாவுடன் கடல் வாணிபம் செய்வதற்காக, இராஜராஜன் பல உயர்ந்த பொருள்களைப் பரிசாக அனுப்பியது குறித்து சீன நூல்களும் தெரிவிக்கின்றன.

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"

சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம் உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு என்று புகழப்பெற்றது. நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும். அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ள "ஆயக்கட்டுச் சபை" என நீர்ப்பாசனத்திற்காக கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார். இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத் துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன. இராஜராஜனின் தேர்ந்த நிர்வாகத்திற்கு இது ஒரு சான்று. இன்னொரு சான்று,  ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம். பண்டாரம் என்றால் என்னவென்று பார்க்கும் முன் இன்னொன்னு பார்த்துடலாம் (பண்டாரம் என்ற சொல்லுக்கு பரதேசி, ஆண்டி என்ற பொருள் தான் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றொரு பொருளும் உண்டு).

இராஜராஜ சோழன் எவ்வளவோ செய்திருந்தாலும்.. அவர் பெயரைக் கேட்டதும் முதலில் நினைவிற்கு வருவது வ.பி. 2041-ல் ஆயிரமாவது பிறந்தாண்டைக் கொண்டாடிய தஞ்சை பெரிய கோயில். 'ராஜராஜீஸ்வரம்' என்ற அந்தக் கலைப் பொக்கிஷத்தை இராஜராஜன் ஆன்மீகத் தளமாக  உருவாக்கவில்லை. சோழ மண்டலத்தின் நிர்வாகக் கேந்திரம் அது. சோழர் காலத்து இலக்கியம், கலை, அரசியல், வாழ்வியல் முறைகள், பொருளாதாரம் என சகலமும் பெரிய கோயில் மூலமாகவே நமக்கு தெரிய வந்தது. கோயில் விளக்குகளை ஏற்ற தினமும் நெய் அளிப்பதற்கு பதிலாக இராஜராஜ சோழன் கால்நடைகளை மக்களுக்கு தானமாக வழங்கினார். மக்கள் பதிலுக்கு பால், நெய் என கோயிலுக்கு தானமாக அளிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கெட்டிக்காரர் இராஜராஜன். அதே போல் கோயிலுக்கென்றும் ஏராளமான கொடை வழங்கினார் இராஜராஜ சோழன். அதன் ஒரு பகுதியை மக்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கினார். அதை நிர்வகிக்க தான் ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம் தொடங்கப்பட்டது. அதாவது இன்றைய வங்கி போல. ஊர் சபைகள், வணிகக்குழுவினர், விவசாயிகள், தனி நபர்கள் எனப் பலரும் அந்த வங்கியில் கடன் பெற்றார்கள். ஆண்டொன்றுக்கு 12.5% வட்டியைக் கோயிலுக்கு செலுத்தினார்கள்.


வ.பி. 1037ல் தொடங்கப்பட்டது பெரிய கோயிலின் கட்டுமானம். வ.பி.1041ல் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயிலுக்கான கற்களை சுமார் 75 கி.மீ. தொலைவிலிருந்து எடுத்து வரப்பட்டது. ஆக இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி முடிக்க பலரை அடிமைகளாக கசக்கி பிழிந்திருப்பார் என போகிற போக்கில் கருத்து சொல்லும் பலர் உள்ளனர். ஆனால் இராஜராஜ சோழன் கோயில் கட்டுமானம் பற்றிய ஒவ்வொன்றையும் ஆவணத்தை அதீத கவனத்துடன் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிரந்திர ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 118 ஊர்களிலிருந்து நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள், ஓதுவார்கள், உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்போர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், நிவந்தம் அளித்த ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என சகலரின் பெயரையும் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். இராஜராஜ சோழன் "அன்பே சிவம்" என உணர்ந்த ஞானி. சாதி அது இது என சக மனிதனை மதிக்காத சம காலத்து சாதாரணர்கள் முதல் தினவெடுத்த அரசியல்வாதி வரை அனைவரும் அந்தத் தஞ்சை கல்வெட்டில் தலையை மோதி கொண்டு சாகலாம்.

சரி மும்முடிச் சோழனான இராஜராஜ சோழனின் தஞ்சை அரண்மனை எங்கே? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். "ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே!!" என சொல்வது போல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகளையும் சீதனமாக அனுப்பிவிட்டார். அதில் ராஜராஜன் வழிபட்ட பஞ்சதேக மூர்த்தி செம்புச் சிலையும் பரோடாவிற்கு போய் விட்டதாம்.


கல்வெட்டியலின் தந்தையான கே.வி. சுப்ரமணிய ஐயருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அற்புதமான ஒருவன்;
அற்புதத்தில் ஒருவன்*.
இரண்டும் ஒருவனே
அவன்,
இராஜராஜ சோழன்.

- சிம்ம வாகனி. 

*பத்துக் கோடியில் ஒருவன்


மேலே உள்ள படம்.. தஞ்சை பெரிய கோயில் மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம். அந்த ஓவியத்தில் உள்ளவர்கள் அரசு அலுவலர்கள். பெண்கள் இழுத்து போர்த்திக் கொண்டு பாரம்பரிய உடை அணிந்தால் கலாச்சார சீர்கேடு ஏற்படாது என துள்ளிக் குதிக்கும் ஆண்கள்.. 1000 ஆண்டுக்கு முற்பட்ட உடையை அணிந்து கலாச்சாரத்தைப் போற்றி பாதுக்காக்கலாமே!!

No comments:

Post a Comment