Thursday, September 19, 2013

கதை

கொள்ள‌ நாளாச்சில்ல கதை கேட்டு. இன்னைக்கு கேப்பம்.

ஒரு ஊர்ல ஒரு அண்ணாச்சி இருந்தாங்க. வியாவாரத்துல ரொம்ப நல்ல பேரு. ஆனா பாருங்க அகராதில கஞ்சம் = அண்ணாச்சின்னு போடலாம். ஊருக்குள்ள ஒருத்தருக்கும் தெரியாது. பந்தாவா இருப்பாரு. வாரத்துல ஒரு நாள் ஒரு வேள தான் அரிசிச் சோறு. அதும் விலை கம்மியான அரிசியில. மத்த நேரமெல்லாம் கம்பங்கூழு, வடி கஞ்சி, கேப்பங்கூழுன்னு அளவாத்தேன். விருந்தாளிக வந்துட்டாமட்டும் நல்லா சமைச்சி சாப்புடுவாங்க. போனப்புறம் அந்த வாரத்துல ஒரு நாள் சோத்துக்கும் வேட்டு வெச்சிருவாரு.

சாப்பாட்டு வேளையில யாராவது வந்துட்டா, வாங்க சாப்பிடங்கற பேச்செல்லாம் கிடையாது. கடை மூடுறப்ப சிந்திக் கிடக்கிற அரிசிய கூட்டி வாரி ஒரு பைல குப்பையோட கொண்டு வருவாரு. தங்கமணி அத புடைச்சி சுத்தம் பண்ணி அரிசிய மட்டும் தனியா எடுத்து வைக்கும். அதுலயும் சீரகச் சம்பா அரிசி தனியா எடுத்து வச்சி ஒரு கைப்புடி அரிசி கங்குலயே வேகவெச்சி சோறாக்கி வைக்கணும். அண்ணாச்சி கஞ்சி குடிச்சாலும் வாய கழுவிட்டு அந்த சோத்துல ஒண்ணு ரெண்டு பருக்கை எடுத்து மீசைல ஒட்ட வெச்சிகிட்டு பெருசா ஏப்பம் விட்டுகிட்டு வந்து உக்காருவாரு. பார்க்கிறவங்க அண்ணாச்சி தினம் சீரகசம்பா அரிசி சோறுதான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கணுமாம் . 

ஒரு நா வ‌ட்டுல வடிகஞ்சியும் தொட்டுக்க வெங்காயமும் வெச்சிகிட்டு சாப்பிட போக, யாரோ ஒரு ஆளு பார்க்க வந்துட்டாங்க . சாப்பிட்டுகிட்டிருக்கேன், அப்படி உக்காருங்கன்னு சொல்லிட்டு சாப்பிட்டு வந்தாரு. வந்தவர பார்த்து, என்னாதான் சொல்லுங்க. சீரகசம்பா அரிசில சோறாக்கி, கத்திரிக்கா குழம்பு காரமா , நல்லெண்னை ஊத்தி கலந்து அடிச்சா அது ருசியே வேறன்னு ஜம்பமா பேசிக்கிட்டிருக்கறப்ப அவரு பையன் ஓடியாந்தான். யப்பா பூனை உன் சோத்த திங்குதுப்பான்னு அலறினான். அண்ணாச்சி டம்பமா சாப்பிடட்டும் விடுடா. வாயில்லா ஜீவன்னு பிட்ட போட்டாரு. பையனுக்கு நம்ப முடியல. ஆசையா நான் தின்னா டின்னு கட்டுற ஆளு, திங்கட்டும்னு சொல்லுதான்னு. திரும்பவும், யப்பா! நீ கஞ்சி குடிச்சிட்டு மீசைல ஒட்டிக்க வச்சிருந்த சோத்த பூனை திங்குதுப்பான்னு அலறினான். அண்ணாச்சிக்கு மானம் போச்சு.

பய புள்ளைய இப்படியே விட்றப்படாதுன்னு ரொம்ப கண்டிசனா வளக்க ஆரம்பிச்சாரு. பள்ளிக்கோடம் போக மிச்ச நேரம் கடையில வேல செய்யணும்னு சொல்லிட்டாரு. ஒரு நா யாரோ வாடிக்கைக் காரவுங்க வீட்டில மளிகை சாமான் பட்டியல் வாங்கிட்டு வர பையன அனுப்பினாரு. தெரியும் கொஞ்ச தொலைவுன்னு. ஆனாலும் வெரசா வரணும்டே. பராக்கு பார்த்துகிட்டு வந்தா பிச்சிபோடுவேன்னு சொல்லிட்டு வேலைல இருந்தாரு. பையன் எப்போ போனான் எப்போ வந்தான்னே தெரியாம சிட்டா போய் வாங்கிட்டு வந்துட்டான். அண்ணாச்சியால நம்ப முடியல. ஒரு வேளை கடைல இருந்து காச எடுத்துட்டு பஸ்ல போய்ட்டு வந்துட்டானோன்னு திகிலா போச்சி. எப்படிடா இவ்வளவு வெரசா வந்தன்னாரு.

பையன் பெருமையா நம்ம முனியன் சைக்கிள்ள போனானா. அவன் பின்னாடியே தொரத்திக்கிட்டு போய்ட்டு வந்துட்டேன்னான். வந்திச்சி அண்ணாச்சிக்கு கோவம். இப்படி ஒரு புள்ள இருப்பியா? எத்தினி பஸ்ஸு, எத்தினி ஆட்டோ ஓடுது. அதில ஒரு பஸ் பின்னாடியோ ஆட்டோ பின்னாடியோ ஓடிப்போய் வந்திருந்தா எவ்வளவு காசு மிச்சம். சைக்கிள் பின்னாடி ஓடி என்னாடா லாபம்னு அடி பின்னிட்டாரு.

கொஞ்ச வருசம் போச்சி. ஒரு நா வரி ஆபீஸிக்கு போயாக வேண்டிய நிலமை. பயந்து பயந்து பையன கடையில விட்டு, ஆயிரம் எச்சரிக்கை சொல்லி கிளம்பி போனாரு. திரும்பி வர மதியம் தாண்டிடிச்சி. இவரு வந்து பையனை வீட்டுக்கு சாப்பிட அனுப்பிட்டு ராத்திரி வீடு திரும்பினாரு. உள்ள வரவுமே குழம்பு வாசனை தூக்குச்சி. அண்ணாச்சிக்கு அடிவயறு கலங்கிபோச்சு. யாருடா விருந்துக்கு வந்து செலவு வெச்சதுன்னு. தங்கமணி பார்த்த பார்வையும் சரி இல்ல. ஒண்ணும் பேசாம சாப்பிட உக்காந்தாரு. கேப்ப களியும் கொழம்பும் கொண்டு வந்து வைச்சது தங்கமணி. ஒரு வாய் சாப்டாரு. குழம்பு ருசின்னா அப்படி ஒரு ருசி. கோவம் வந்திருச்சி. என்னாதான் விருந்துன்னாலும் இப்படி உப்பு உரைப்பா வெச்சா கட்டுப்படி யாகுமா? கூட ஒரு கவளம் உண்டுட்டு போமாட்டாங்களா? யாரு சொத்துன்னு.

அடியே! யாருடி விருந்துக்கு வந்தது. இவ்வளவு ருசியா கொழம்பு வெச்சிருக்கிற. எனக்கு கூட மிச்சமில்லாம சோத்த தின்னுட்டு போய்ட்டாங்களா? குடும்பம் விளங்குமான்னு கத்துனாரு. தங்கமணி வந்து துப்பாத குறையா பார்த்து, விருந்துமில்ல ஒன்னுமில்ல. எம்புள்ளைய எப்பவும் உதவாக்கரைன்னு கரிச்சி கொட்டுவீங்களே. அவன் என்னா பண்ணான் தெரியுமா. கடையில இருந்து வர நான் களியாக்கிட்டிருந்தேன். யம்மா குழம்பு பாத்திரத்தில தண்ணி கொண்டான்னான். கொண்டாந்தேன். அதுக்குள்ள கைய உட்டு அளைஞ்சான். என்னாடா இதுன்னேன். யம்மா! காலைல இருந்து எத்தன பேருக்கு புளி, மஞ்ச தூள், மொளகா, உப்புன்னுன்னு எடுத்த கையி. ருசி எல்லாம் ஒட்டி இருக்கில்ல. கழுவியெடுத்தா கொழம்புக்காச்சி. நீ ஏன் தனியா எல்லாம் செலவழிக்கணும்னான். அசந்துபோய்ட்டேன். அதில வெச்ச குழம்புதான். பாவி மனுசா. இத்தினி வருசம் இது தெரியாம நீ குடுக்கிற சுண்டக்கா புளி, சிட்டிகை மஞ்சள், மிளகாப் பொடில குழம்பு வெச்சி நாக்கு செத்துப் போச்சுன்னு புள்ளைய பெருமையா பார்த்தா. நீ இப்பிடி வெவரமா இருந்திருந்தா இத்தினி வருசத்துல ஆன காசுக்கு இன்னும் ரெண்டு கடைய வெச்சிருக்கலாம்னா.

எளுந்தாரு அண்ணாச்சி. பையன போட்டு அடி பின்னிட்டாரு. மொத்த கையும் ஏண்டா இன்னைக்கே கழுவின. இன்னைக்கு விரலு நாளைக்கு உள்ளங்கையின்னு கழுவி இருந்தா ரெண்டு நாளைக்கு குழம்புக்கு ஆகியிருக்கும். பொறுப்பில்லாம திரியிரான்னு. அதே வேகத்துல தங்கமணிக்கு ஒரு அறை. அவந்தான் சின்னபுள்ள. உனக்கெங்கடி போச்சி அறிவு. பாதி தண்ணியில குழம்பு வெச்சி மீதி தண்ணியில நாளைக்கு ரசம் வெச்சிருக்கலாம்லடின்னு கத்தினாரு.

மனசுக்குள்ள நினைச்சாராம். பாவி மக்கா. இது தோணாம போச்சே. அதான் கடையில வேல செய்யிற பையன் மதியம் சாப்பாட்ட தொறந்தா அந்த வாசனையா? பரவால்ல. புலிக்கு பிறந்தது பூனையாகல. பையன வெவரமாத்தான் வளத்திருக்கேன். கடை பையன நிறுத்திட்டு பையன முழு நேரம் கடையில வேலைக்கு வெச்சிட்டா, அந்த சம்பளம் வேற மிச்சமாச்சேன்னு கொள்ள சந்தோஷமா உறங்கிப் போனாராம்.

No comments:

Post a Comment