துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல. அதில் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசியின் வேர் மண்ணை தண்ணீரில் குழைத்து நெற்றியில் இட்டுக் கொள்வதால் சகல சம்பத்துகளும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்தது துளசி. சன்யாஸிகள் துளசியால் பூஜை செய்த பிறகு அதை சிறிய அளவில் பிரசாதமாக உட்கொள்வதும், முகர்வதும், காதில் வைத்துக் கொள்வதற்கும் உபயோகிக்கின்றனர்.
பல வகை துளசிகளில் வெண்துளசியும் கருந்துளசியையும் சாதாரணமாக காணப்படுகின்றன. காட்டு துளசி என்னும் ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை) ராம துளசி (எலுமிச்சம் துளசி) என்றும் வகைகளுன்டு. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை.
மலேரியா, இன்புளயன்ஸா போன்ற ஜ்வர நிலைகளில் துளசியின் உபயோகத்தால் அவ்வகை நோய்கள் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் சக்தியை உடையது.
சுவையில் காரம் கலந்த கசப்புடன் கூடியது. உஷ்ணப் பாங்கான பூமியில் அதிகம் விளையக் கூடியது. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். வாயில் ஏற்பட்டுள்ள குழகுழப்பு, அழுக்கு ஆகியவற்றை துளசி அறவே நீக்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் விரைவில் ஏற்படுத்துகிறது. துளசியை மென்று தின்பதால் பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
குளிர் ஜ்வரம், கபத்தினால் ஏற்படும் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உடன் துளசி உண்டாக்கி, ஆரோக்யத்தை மேம்படச் செய்கிறது.
இன்புளயன்ஸா, மலேரியா போன்றவற்றில் துளசியை போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியின் உபயோகத்தின் மூலம் நீக்கலாம்.
உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் பதமழிந்து அதன் மூலம் ஏற்படும் குடல் கீரைப்பூச்சிகள் அனைத்தையும் துளசி அழிக்க வல்லது. உடலில் ஏற்படும்
தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதாலும் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல் 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
துளசியுடன் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் ஜ்வரம், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி, முறை ஜ்வரம், யானைக்கால் ஜ்வரம் ஆகியவை நீங்கி விடும். ஜ்வரத்தின் ஆரம்பத்திலேயே துளசியும் மிளகும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஜ்வரம் மேலும் வளராமல் நின்று விடும். 10 துளசி இலைகளும் 5 மிளகுமே போதுமானது. ஜ்வரம் வந்துவிட்டால் துளசி மிளகும் சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் சர்க்கரை கலந்து பருகுவதால் ஜ்வரம் தணிந்து விடும்.
துளசி, மிளகு, பழைய வெல்லம் ஆகியவற்றின் கூட்டு உபயோகம் மலேரியா, யானைக்கால் ஜ்வரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன. மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர்ஜ்வரம், காணாக்கடி, முறை ஜ்வரம் ஆகியவை வராது.
துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜ்வரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். விஷஜ்வரமும் வராது. அஜீர்ணம், வாயுப்பொறுமல், வயறு உப்புசம், வலி, அஜீர்ணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமக்கஷாயம், ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்ச்சளியில் துளசி, ஓமம், பழைய வெல்லத்தின் நித்திய உபயோகமும் அதுபோல வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகபடுத்தினால் மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், ஈறுகொழுத்து ஏற்படும் வேதனையில் துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. துளசியை அரைத்து தோலில் பற்றிட காணாக்கடி மறைந்து விடும்.
பேன், அரிப்பு, படை, தேமல், வரட்டுசொரி போன்ற நோய்களில் துளசி சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர விரைவில் குணமாகி விடும்.
கடுமையான தலைவலியில் கிராம்பு, சுக்கு, துளசி சாறு ஆகியவற்றை அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடன் தலைவலி நீங்கி விடும். மூக்கடைப்பு, மண்டையில் நீர் கோர்த்து ஏற்படும் நீர்க்கோர்வை, தலை குடைச்சல் ஆகியவற்றில் துளசியை தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும்.
இப்படிப் பலவகைகளில் உபயோகமாகும் துளசியை அனைவரும் பயிறிட்டு அதன் பலனை முழுவதும் நாம் பெற முயற்சி செய்ய வேண்டும்
No comments:
Post a Comment