Tuesday, March 5, 2013

ஆயுர்வேதம் 2

நாள் முழுவதும் நறுமணம் கமழ…
டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
மனித இனத்தின் உடல் கூறு எல்லாம் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தாயும் தந்தையும் சேர்ந்து கருவாக உதித்த அந்த கணத்திலிருந்த தாய், தந்தை பீஜ நிலை, கால நிலை, பிறந்த பின் வளர்ந்த சூழ்நிலை, உணவுப் பழக்கம் முதலியவற்றால் ஒவ்வொருவரது தேகநிலையும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது. இதை தேகவாகு என்று கூறுவர். நீங்கள் பித்த தேகவாகு உள்ளவராக இருந்தால் தேமல், அக்குளில் ஏற்படும் கடும் நாற்றம் போன்றவை பித்தத்தின் இயற்கை சுபாவத்தினால் ஏற்படுபவை. பித்த தோஷத்தின் குணத்தை வர்ணிக்குமிடத்தில் ‘விஸ்ரம்’ அதாவது துர்வாடை கொண்டது என்று வாக்படர் எனும் முனிவர் கூறுகிறார். பூண்டு, வெங்காயம், முள்ளங்கி போன்ற கார மணமுள்ள பொருளை உண்பவருக்கு துர்வாடை வியர்வையில் அதிகம் வெளிப்படும். வாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் போன்ற நிலைகளாலும் பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில் வரக்கூடும். உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும் ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய், வெண்ணெய், சர்க்கரை கலந்து கடைந்த மோர், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள், பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, மணத்தக்காளி, வல்லாரை, சிறுநீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிப்பிஞ்ச, புடலங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வாழைப்பூ, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வாழைத் தண்டு, சுண்டைக்காய், மாவடு, இஞ்சி, எலுமிச்சை, நார்த்தங்காய், மாதுளம்பழம், நெல்லிக்காய், பழைய பச்சரிசி, கோதுமை, பச்சைப்பயறு போன்றவை சாப்பிட உகந்தவை. காரம், புளி, உப்பைக் குறைக்கவும். பானையில் வெட்டிவேர் போட்டு ஊறிய தண்ணீரை குடிப்பதற்குப் பயன்படுத்தவும்.
உடலில் நறுமணம் கமழ கடுக்காய்த் தோல், லோத்திரப் பட்டை, வேப்பம் பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, மாதுளம்பட்டை இவற்றை மிகவும் மென்மையான தூளாக்கிக் கொள்ளவும்.
இந்தத் தூளுடன் சந்தனத் தூள் மற்றும் ஃபேஸ் பவுடர் கலந்து வைத்துக் கொண்டு பூசிவர பெண்களுக்கு ஏற்படும் உடல் நாற்றம் மறையும். நாள் முழுவதும் நறுமணம் மாறாமலிருக்கும்.
கடுக்காய்த் தோல், சந்தனத் தூள், கோரைக் கிழங்கு, சிறுநாகப்பூ, விளாமிச்சைவேர், வெள்ளை லோத்திரப்பட்டை, ஃபேஸ் பவுடருடன் கலந்து உடலில் பூசிக் கொள்ள ஆண்களுக்கு வியர்வையால் ஏற்படும் கெட்ட மணம் விலகும்.
அக்குள் நாற்றம் விலக கடுக்காய், வில்வபழச் சதை, கோரைக்கிழங்கு, புளி, புங்கன் விதை இவற்றைத் தூளாக்கி தண்ணீரில் குழைத்து அக்குள் பகுதியில் பூசிய பின் குளிக்க அங்குள்ள கெட்ட மணம் மறையும்.
நாவல் இலையை நன்கு நைய அரைத்துப் பூசிக் குளிக்க கோடைக் காலத்தில் வியர்வையால் ஏற்படும் துர்வாடையும் கோடைக் கட்டி சினப்புகளும் மறையும்.
பாசிப்பயறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சைவேர், பூலாங்கிழங்கு இவை வகைக்குச் சம அளவு சேர்த்து இடித்த தூல், குளியலுக்குப் பூசிக் கொள்ள நல்ல மணம் தரவல்லது. தேமலும் மறைந்துவிடும். ஆயுர்வேத மருந்துகளில் ஏலாதி சூரணம் பாசிப்பயறுடன் கலந்து தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment