Thursday, September 19, 2013

மொட்டை மாடி, பால்கனித் காய்கறி தோட்டம்


March 13, 2012 at 12:54pm
அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.
‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.
“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.
மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?
புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.
மழைக்காலத்திற்கு?
அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்


குளிர்காலத்திற்கு?
முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்
மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.


மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?
1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.
மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.
வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.
பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.
மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?
நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.


“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.
''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.
வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.
இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.
கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.
100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை
சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர்
எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.Source : AV


சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.
வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்... அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!
சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன... அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்... வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்... இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு... நிறைய குருவிகள் வருது... காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா ரொம்பப் பிடிக்கும். அவருக்கும், அம்மாவுக்கும்கூட இந்த கார்டன் ரிலாக்ஸ் தர்ற இடமா இருக்கறதில் எனக்கு ரொம்ப திருப்தி, சந்தோஷம்!’’ என்கிறார்.

மொட்டைமாடியில் கார்டனா? பேஸ்மெண்ட்  ஸ்ட்ராங்க்தான், பில்டிங் வீக் ஆகிவிடாதா என்கிறீர்களா? ‘மொட்டைமாடியில் முறைப்படி கார்டன் அமைத்தால், பில்டிங்கிற்கு எந்த சேதாரமும் ஆகாது’ என்கிறார், லேண்ட்ஸ்கேப் நிபுணர் ஆண்டனிராஜ்.

எதைச் செய்ய வேண்டும்? எது கூடாது?

‘‘டெரஸ் கார்டன் அமைக்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் வைப்பது அவசியம். முதலில் மொட்டை மாடியில் தண்ணீர் எந்தப் பக்கம் நோக்கிப் போகிறது என்பதைப் பார்த்து, அதற்கு எதிர்பக்க இடத்தை கார்டன் போட தேர்ந்தெடுங்கள். அந்தப் பகுதியில் கார்டன் ஸ்கெட்ச் போட்டு, அரை அடி உயரத்திற்கு கார்டன் தரையை உயர்த்திக்காட்ட தடுப்புச் சுவர் கட்டுங்கள். இந்த தடுப்புச் சுவரின் நடுவில் கார்டன் நீர்வடிய துவாரங்கள் இருக்க வேண்டும்.  அதன்மேல் ஜியோ டெக்ஸ்டைல் மேட்டுடன் லைட் வெயிட் மண் கலந்து போட வேண்டும். இந்தக் கலவை 5 கிலோ எடை மண் தேவைப்படும் இடத்தில் மண்ணை 2 கிலோவாக குறைக்கக்கூடியது. இதன்மேல் புல்தரை அமைத்து, அங்கங்கே தொட்டிகள் வைத்து, வழித்தடங்கள் அமைத்துவிட்டால் கார்டன் ரெடி.

மழை பெய்தாலும், தண்ணீர் அதிகமாகிவிட்டாலும், வாட்டர் ப்ரூஃப் வழியே நீர் வடிந்துவிடும். மொட்டை மாடித் தரைக்கு எந்த டேமேஜும் வராது’’ என்கிறார் ஆண்டனிராஜ்.

அப்புறமென்ன... உங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் பச்சைப் பசேல் தோட்டம் போடவேண்டியதுதானே

ரசாயன உரமில்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள்
புதுச்சேரி, ஏப்ரல் 3: ரசாயன உரமில்லாமல் இயற்கை உரமிட்டு வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் வளர்த்து வரும் தம்பதியினர். அவ்வாறு விளையும் காய்கறிகளை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு வருவதாக கூறுகின்றனர்.




புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் பிரடெரிக் (வயது 63). இவர் புதுச்சேரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் முதுநிலை மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி செங்கோல் மேரி (வயது 63). இவர் புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
இவர்களது வீட்டின் இரண்டாவது மொட்டை மாடி முழுவதும்  தொட்டிகளில் பல்வேறு செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது இவர்களது மாடி தோட்டத்தில் உள்ள வாழைக் குலை தள்ளியுள்ளது. இதனைப் பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருவது பற்றி செங்கோல் மேரி கூறியதாவது:
எனது கணவர் பிரெடரிக் ஒரு நாள் ரசாயண உரமில்லாமல், இயற்கை உரத்தில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து கணவரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக கடந்த முயற்சித்து மாடியில் தொட்டிகளில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்,  பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற செடிகளையும், கொடிகளில் வளரக்கூடிய பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளையும் வளர்த்தேன்.
இதனை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து செய்து வருகின்றேன். அப்போது முதல் பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து பறிக்கப்படும் காய்கறிகளையே சமைத்துச் சாப்பிட்டு வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வீட்டின் மெத்தையில் தோட்டம் வைத்திருப்பதைப் பார்த்த மதுரையில் உள்ள எங்களது நண்பர் ஒருவர் வாழைக்கன்று ஒன்றை கொடுத்தார். அந்த வாழைமரம்தான் தற்போது ஐந்தாவது முறையாக குளை தள்ளியுள்ளது.
மேலும் பப்பாளி மரத்தையும் வளர்த்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கில் வாங்கிய மாமரக்கன்று ஒன்றை தொட்டியில் வளர்த்தோம். அம்மாமரம் ஒரு ஆண்டிலேயே சிறந்த முறையில் கனிகளைக் கொடுத்தது.
அதன்பின்னர் நாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியை உடைத்துக் கொண்டு மாமரத்தின் வேர் வந்ததால், அம்மாமரத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்து விட்டோம்.
எங்கள் வீட்டு தோட்டத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். ரசாயண உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. பூச்சி மருந்தாக சாண சாம்பலை மட்டுமே தூவுவோம். மற்றபடி எந்தவிதத்திலும் ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்துவதில்லை.
இந்த தோட்டம் எங்களுக்கு மிகந்த சந்தோஷத்தை தருகின்றது. மெத்தை எத்தனையாவது மாடியாக இருந்தாலும் நாம் நினைத்தால் தோட்டத்தை அமைத்து, பயிரிட்டு  காய்கறிகளைப் பறித்து சந்தோஷமாக வாழலாம். இந்த தோட்டம் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி,தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/i2020201a-ea3153ep-abia32020i2039

திரு சுல்தான் அவர்களே, தயவுசெய்து உங்கள் ஊர் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.

முனைவர் கதிரேசன்,
வேளாண்மை, இண்.டி.ஜி.
இணைய தளங்களிலிருந்து

No comments:

Post a Comment