Wednesday, March 6, 2013

ஆயுர்வேதம் - 5 - சுக்கு


சுக்கின் மகிமை
சுக்கை ஆயுர்வேதம் 'மஹொஷதம்' என்று குறிப்பிடுகிறது. மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று அதன் பொருள். இன்றைய காலகட்டததில் மனிதருக்கு அளவறிந்து உண்ணவும், வயதுகேற்ப உண்ணவும் தெரியவில்லை. அதனால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளுக்கு சுக்கு பெரிய இரட்சையாகும். இஞ்சியை நன்கு காயும்படி செய்தால் அது சுக்கு ஆகும்.
சுக்கு குழந்தைகளுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் இவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.
பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டல் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
சுக்கின் பொது குணங்களும் செய்கையும் ஆராய்ந்து பார்த்தால் அது வாத பித்த கபங்களாகிய மூன்று தோஷங்களையும் குறைக்கும். பித்தம் அடங்கும், ருசிதரும், இதயம் பலம் தரும் குரல் தெளிவாக்கும், உடல் வளர்க்கும், உற்சாகம் தரும், பசியைக் கூட்டும். உமிழ்நீர் சுரப்பிக்கும், வயிற்றுப் புளிப்பை நீக்கும்.
'சுக்குக்கு புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு' என்பது பழமொழி. அதனால் சுக்கை மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.
உபயோக முறைகள்
1. பற்று - சுக்கைத் தூள் செய்து, சிறிது அரிசிமாவில் சேர்த்து களி செய்து நெற்றியில் பற்றிட தலைவலி தீரும். சுக்கை தனியாக அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றிட வீக்கம் கரையும். கால் குடைச்சல், மூச்சுப்பிடிப்பு, வலி உள்ள இடத்தில் சுக்கை அரைத்துப் பூசி குணம் பெறலாம்.
2. கெடாமல் இருக்க - கட்டுச் சோற்றில் சுக்கைப் சேர்க்க சில தினங்கள் உணவு கெடாது. மோரில் உப்புடன் சுக்கு சேர்க்க, மோர் கெடாது.
3. பல் வலிக்கு - சுக்கு துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்று வர பல்வலி எகிர்வலி குறையும்.
4. குடிக்க - 2 ஸ்பூன் சுக்கு பொடியை "அரை" லிட்டர் தண்ணீரில் போட்டு "கால்" லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, 6 ஸ்பூன் மூன்று வேளை குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும். மேலும் சுக்கு, ஜீரகம், கொத்தமல்லி மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, 2 ஸ்பூன் "அரை" லிட்டர் தண்ணீரிலிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். எந்த குடிநீரையும் வீட்டில் தூய்மை செய்யும் முறை இது.
5. வயிற்றும் போக்கை நீக்க 10 கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் களியாகக் கிளரி மூன்று வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொள்ள வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
6. குளிக்க - சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்க தலையில்
நீர்க்கோர்வை தலைவலி, முகநரம்பு வேக்காளம் தீரும்.
சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.

No comments:

Post a Comment