காடைக்கண்ணி என்பது நெல்வகையா? பயறு வகையா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. 70 நாட்களல் விளையக்கூடிய பயறு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அறுபதே நாளில் விளையக்கூடிய தானிய வகைகளைப் பெரும்பாலானோர் பார்த்திருக்கவே மாட்டார்கள். நான் கண்டெடுத்தேன். எப்போது? எங்கே? எப்படி?
நான் விவசாயம் செய்து கொண்டிருப்பவன். எங்கு என்ன ரகம் கிடைக்குமென்று ஆவலாய்த் தேடித் திரிபவன். பெரும்பாலும் நான் செய்யும் இயற்கை விவசாய முறைகளை எடுத்துச் சொல்லுபவன். படித்த அறிஞர்கள் பல நூல்களைப் படித்து யார் யார் என்னென் கூறியிருக்கிறார்கள் என்று மேற்கோள்காட்டிப் பேசுவார்கள். நீங்கள் செய்து அனுபவப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். இயற்கைவிவசாயம் பற்றிப் பேசுப் பல தொண்டு நிறுவனங்களுக்குப் பல கிராமங்களுக்கு என்னை அழைக்கின்றனர். அவ்வாறு அழைத்த தொண்டு நிறுவனங்களில் ஒன்று வையம்பட்டி அகிம்சா தொண்டு நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் பேசிவிட்டுப் புறம்படும்போது அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களையும், காடைக்கண்ணி, சிறுதினை ஆகிய தானியங்களில் கொஞ்சம் என்னிடம் கொடுத்தார்கள். ஆனால் அறுபது நாட்களில் விளையக்கூடியவை என்று எனக்குச் சொல்லவில்லை. எந்தப் பருவத்தில் விதைப்பதென்றும் என்னிடம் கூறவில்லை. காடைக்கண்ணியைப் பார்த்தவுடன் 65 ஆண்டுகளுக்கு முன் என் தோட்டத்தில் பயிரிட்டது, அதன்விதை, பயிர்ப்பருவம், பொதிப்பருவம், கதிர்ப்பருவம், கதிர் முற்றிய பருவம் அதை அறுவடை செய்த விதம், தானியத்தை பிரித்த விதம், வீட்டுக்குக் கொண்டு வந்து குலுக்கையில் போட்டது. அரிசி ஆக்கியது, சாப்பிட்டது, அதன் ருசி என் நினைவுக்கு வந்தது. அதை விதைத்ததிலிருந்து அறுபதே நாட்களில் அறுவடை வந்துவிடும். சிறிது நிலம் இரு,நதாலும் இடத்தை மாற்றி மாற்றிப் பயிரிட்டு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
1953ல் கடுமையான வறட்சி பஞ்சம், கிணற்றில் நீர் நிலை குறைந்துவிட்டது. கிணற்றை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆழப்படுத்தும்போது கிடைத்த நீரைப் புன்செய்யில் பாய்ச்ச வேண்டும். அதற்கான பயிர் என்னவென்று நினைத்தபோது குறுகிய காலப் பயிராகிய காடைக்கண்ணியும், தினையும் ஞாபகத்திற்கு வந்தது போலும் காடைக் கண்ணியையும், தினையையும் சேர்த்து விதைத்தோம்.
மூன்றாவது நாளில் முளைகொண்டது 20ஆம் நாளில் களை எடுத்தோம். பயிரில் 20க்கும் மேல் சிம்புகள் தென்பட்டன. 40வது நாளில் பூட்டை வாங்கியது. கதிர்கள் வெளித்தள்ளின. 60வது நாளில் அறுவடை செய்தோம். நெல்கதில் அடிப்பதுபோல் அடித்து வைக்கோல்களை மாடுகட்டிப் போரடித்தோம். தானியங்களைப் பிரித்தெடுத்தோம். நன்கு காயவைத்தக் குலுக்கைகளில் சேமித்து வைத்தோம்.
அந்தத் தானியத்தை இரண்டு முறைகளில் சமையல் செய்யலாம். அவிக்காமல் உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமையல் செய்யலாம். இரண்டாவது முறை அந்தத் தானியத்துடன் சிறிது நீர் சேர்த்து குழைத்து பானையில் போட்டு அவித்து பக்குவமாக இறக்கிக் காயப் போட்டு உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணலாம். அதற்கேற்ற காணப்பயிற்றுக் குழம்பும், புளி ஊற்றிய தோட்டத்திலுள்ள காய்கறிகளையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்ட பின்பு கையைக் கழுவினால் எருமைத் தயிர் விட்டுச் சாப்பிட்டால் கை எப்படி வழுவழுப்பாக இருக்குமோ அதே மாதிரி இருந்தது.
அந்தச் சோறு சாப்பிட்டால் உடம்பு தெம்பாக இருக்கும். கடினமான வேலை செய்யலாம். இந்த நினைவுடன் எனக்கு அகிம்சா தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த விதையை மருதோன்றி நடவு செய்த தோட்டத்தில் உள்ள இரண்டடி இடைவெளியில் உடனே வந்து விதைத்து நீர் பாய்ச்சப் பெற்றது. 20 நாளில் களை எடுக்கப்பட்டது. 60வது நாளில் அறுவடை செய்யப்பட்டது. அதனை விவசாய உலகம் என் பத்திரிகை நிருபர் பார்த்துப் பத்திரிகையில் எழுதியிருந்தார். எனக்கு நூற்றுக்கணக்கானோர் விதை கேட்டுப் போன் செய்தனர். எனக்குள்ள வேலைப் பளுவில் அவர்களுக்கு அனுப்ப முடியாது என எண்ணி அந்த விதையில் கொஞ்சம் தாளாண்மை உழவர் இயக்கத்திற்குக் கொடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் தொகையை இயக்கத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டினேன்.
பலர் இது விதை விற்பதற்கான தந்திரம் என்று கூறியதாகக் கூறினார்கள். என் ஊர் பக்கத்தில் தொட்டியபட்டியில் திரு. பொன்ராமலிங்கம் என்பவரக்குக் கொடுத்த விதையை மானாவரி நிலத்தில் விதைத்து அறுபதே நாளில் மகசூல் எடுத்ததை எனக்குத் தெரிவித்ததோடு உழவர் இயக்கத்துக கூட்டத்திலும் கூறினார்.
சிலர் அறுபது நாளில் விளைந்துவிட்டது. எப்படி அரிசியாக்குவது? எப்படிச் சமைப்பது என்று கேட்டார்கள். அவர்களுக்கு அரிசியாக்கும் விதத்தையும், சமைக்கும் விதத்தையும் கூறினேன்.
இத்தகைய தானியம் இன்னும் சில இடங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வேளாண்மை பல்கலைக் கழகம் உற்பத்தி செய்து அரசின் உதவியுடன் இதுபோன்ற புன்செய்த் தானியங்களாகிய காடைக்கண்ணி,தினை, குதிரைவாலி,¢ வரகு, இரும்புச் சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் வறட்சியைத் தாங்கி விளையும். பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகாது. மக்கள் தானியப் பற்றாக் குறையிலிருந்து விடுபடுவர். பெருவாரியான மானாவாரியான நிலங்களைக் கொண்ட தமிழகத்துக்குப் புன்செய்த் தானியங்களை ஓரினப் பயிராகப் போடாமல், கீழே படரும் பயிர்களாகிய கல்லுப் பயறு, காணப் பயறு, தட்டப்பயறு போன்ற பயறுவகைகளையும், சாமை, தினை, இரும்புச் சோளம் போன்ற தானியப் பயிர்களையும் சேர்த்துபோட்டுப் பலன் அனுபவித்ததை இப்போதுள்ள தலைமுறையினர் அறியாதவர்கள். அவர்களுக்குச் செயல்விளக்கப் பண்ணைகள் மூலம் அரசு இயந்திரத்தின் துணையுடனும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், மக்கள் நஞ்சில்லா உணவு உண்பர். சத்துள்ள உணவு உண்பர். உணவுப் பற்றாக்குறை நீங்கும். நீர்வளம் காப்பாற்றப்படும். சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும்.
No comments:
Post a Comment