Tuesday, October 1, 2013

மருந்தாகும் பூக்கள்

Calendula flower essential oil and tinctureநம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. இந்த பூக்களின் மருத்துவ குணம் அறிந்து நாம் பயன்படுத்தினால் ஒரு சில நோய்களில் இருந்து எளிதாக விடுபடலாமே? இது உங்களுக்கு உதவுகிறதா? என்று பாருங்களேன்…
அகத்திப்பூ
அகத்திப்பூவைப் பச்சையாகச் சாப்பிட்டால் வெயிலினாலும், புகையினாலும் ஏற்படும் பித்தம், உடலில் தோன்றும் வெப்பம் ஆகியவற்றை நீக்கலாம்.
அசோகப்பூ
அசோகப்பூவை நன்றாகக் காய வைத்துத் தூளாக்கி 10 கிராம் எடையுள்ளதாய் எடுத்து 30 மில்லி நீரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே குணமாகி விடும்.
அரசம்பூ
அரசம்பூவைத் தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி சொறி சிரங்கின் மேல் தடவி வந்தால் விரவில் குணமாகும்.
அல்லிப்பூ
அல்லிப்பூவைக் காய வைத்துத் தூள் செய்து தினமும் குடிநீரில் கலந்து குடித்தால், மேகநோய் நீர்ப்புழையான் புண், நீரிழிவு நோய், வெப்பத்தால் உண்டாகும் கண் நோய்கள், நீர் வேட்கை, உள் சூடு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மருதோன்றிப்பூ
மருதோன்றிப் பூவைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தால் உடனே தூக்கம் வரும். உடலில் தாங்க முடியாத வெப்பம் இருந்தால் இப்பூவை அரைத்துப் பூசி இரண்டு மணி நேரம் கழித்துக் குளித்தால் குணம் கிடைக்கும். இது போல் இப்பூவை வெண்குஷ்டத்திற்கு அரைத்துப் பூசினால் குணமாகும்.
அன்னாசிப்பூ
அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.
ஆவாரம் பூ
ஆவாரம்பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும்.
உசிலம் பூ
உசிலம்பூவைப் பச்சையாக அரைத்துப் பூசி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள், உடலில் வீக்கங்கள் போன்றவை குறையும்.
இலுப்பைப்பூ
இலுப்பைப்பூவைக் காய வைத்துப் பொடி செய்து குடிநீரில் கலந்து குடித்தால் நீர் வேட்கை குறையும். இப்பூவைப் பச்சையாகப் பால் விட்டு அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் இளைப்பு நோய் குறையும்.
தும்பைப்பூ
தும்பைப்பூவை பசுவின் பால் விட்டு அரைத்து சுத்தமான துணியில் நனைத்து நெற்றிப் பொட்டில் போட்டு வர தலைவலி போய்விடும்.
செம்பருத்திப்பூ
செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.
பூவரசம் பூ
பூவரசம் பூவைச் சம அளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் மறைந்து தோல் மினுமினுப்படையும்.
நன்றி: சித்ரா பலவேசம் -முத்துக்கமலம்.காம்

No comments:

Post a Comment