கண்ணிற்கு மையழகு....
என்ற பாட்டு உண்டு. அது எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.
அந்தக் காலத்தில் தாயார் தன் குழந்தைக்கு 'காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா'.. குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டுவா' என்று பாட, குழந்தை தன் பொக்கை வாயைக் காட்டி சிரிக்க ஆசையுடன் மடியில் இருக்கும் குழந்தையின் கண்ணில் மை இட்டு நெற்றியிலும் ஒரு திலகம் எழுதி.... ஆஹா அந்தக் காட்சியும் அன்னையின் முகத்தில் ததும்பும் ஒரு பெருமிதமும் என்னவென்று சொல்வது?
பெண்கள் தங்கள் கண்களை மேலும் அழகாகிக்க அவர்கள் கண்ணிற்கு அழகைக் கொடுப்பது கண் மை. சின்ன கண்களைப்பெரிதாக தெரியப்படுத்தலாம்.
அவர்களைப் பார்த்தாலே ஆண்களும் சொக்கிப்போவார்கள். இப்போது அந்தக் கண்மையைப் பற்றி பார்ப்போம்.
கண் மை மிகவும் சுத்தமாகத் தயாரிக்க வேண்டும்.
என் பாட்டி காலத்திலிருந்து வீட்டிலேயே இந்த மை தயாரிப்பார்கள்.
அதற்கென்று நல்ல நாள் பார்த்து வளர்பிறையுடன் ஒரு நல்ல திதியும் பார்த்து செய்ய ஆரம்பிப்பார்கள். நல்ல கடுக்காயும் சந்தனமும் வழ வழ வென்று இழைத்து ஒரு செப்பு பாத்திரத்தில் (பஞ்ச பாத்திரம்) அந்த விழுதை பின் பக்கம் தடவி மூன்று செங்கல்களை அடுப்புப்போல் வைத்து அந்தச் செம்பு பாத்திரத்தையும் அதன் மேல் வைத்து விடுவார்கள்.
அந்தக் கடுக்காய் பேஸ்ட் கறுப்பாய் படலாக ஆனவுடன் அதை எடுத்து சில் சொட்டுக்கள் சில சொட்டுகள் விட்டு விளக்கெண்ணை விட்டுக் குழைத்து ஒரு வெள்ளி மைக்கூட்டில் அடைப்பார்கள். அதை தினமும் கண்ணிற்குள் இட்டு வர கண்ணிற்குக் குளுமை. கண்ணில் ஒரு பிரச்சனையும் வராது.
இப்போது உபயோகப்படுத்தும் ஐ லைனெர் என்பது கண்ணிற்கு மேலே அழகுக்காக உபயோகிக்கப் படுகிறது. ஆனால் அழகுடன் ஆரோக்கியமும் வேண்டுமே.
அந்தக் காலத்தில் மாப்பிள்ளைக்குக் கலயாணத்தின்போது விளையாடல் சீராக இந்த மைக்கூட்டையும் வைப்பார்கள்.
இந்தக்கூடு மீன் வடிவமாக இரண்டுப் பக்கங்களும் திறக்கும்படி அமைந்திருக்கும். மாப்பிளையும் மை இட்டுக் கொள்வார். எதற்கு இந்த மைப் புராணம் என்றுக் கேட்டால், விடாமல் சுத்த மை இட்டுக் கொள்பவர்களுக்கு மெட்ராஸ் ஐ வருவதில்லையாம்.
ஆனால் சுத்தக் கடுக்காய் மையாக இருக்க வேண்டும்.
மை கூட்டுவதில் சில வகைகள் உண்டு மிகச்சிறந்த மையாகக் கருதப்படுவது சந்தன மை. ஆனால் சுத்தச் சந்தனமாக இருக்க வேண்டும். கலப்படம் கூடாது. இதற்குத் தேவையான மற்ற பொருட்கள் சுத்தமான சந்தன விழுது, சுத்தமான தூய பஞ்சுத்திரி. சுத்தமான விளக்கெண்ணை. தவிர அதைத்ததயாரிக்கும் இடமும் மிகச்சுத்தமாக இருக்கவேண்டும்.
மேல் சுவரிலிருந்து தூசியோ ஒட்டடையோ விழுந்தால் கண்ணெரிச்சல் வந்து விடும்.
செய்யும் முறை:
1 சந்தனக்கட்டையை (original) நீர் அதிகமில்லாமல் சந்தனக்கல்லில் வழவழவென்று அரைக்க வேண்டும்.
பஞ்சபாத்திரத்தின் மேற்பரப்பில் தடவி பின் காற்றாட காய வவக்க வேண்டும்.
முன்பு சொன்னது போல் மூன்று கற்களை அடுப்புப்போல் வைத்து, மிதமான தீயில் விழுது தடவிய பாகம படும்படி சரியான உயரத்தில் வைக்க வேண்டும்.
இடைவெளி மிக அதிகமாகவும் இருக்கக்கூடாது. அதிகமானால், தீக்கொழுந்து சரியாக சீராகப்படாது; விளக்கெண்ணை, கரியும் சந்தனமும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
இது கரி படிய குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும்.
அடிக்கடி கரி படிந்ததா என்று பார்த்து அதைத் தொந்தரவு செய்யக்கூடாது. கரி படிந்து முடியும் வரை ஒருவரும் அங்கு அடிக்கடிபோய் வரக்கூடாது . ஏன் என்றால் நாம் போகும் போது அசையும் காற்றால் தீக்கொழுந்தும் இங்கும் அங்கும் ஆடியபடி இருக்கும். ஒரே இடத்தில் நிதானமாக எரிய கரி ஒத்தாற்போல் படியும்.
இதை மாக்கல் விளக்கை வைத்தும் செய்யலாம்
ஆடாமல் நிதானமாக விளக்கு எரிந்து பின் கரிபடல் தயாராகிவிடும்.
அதன் பின் கையை டெட்டால் சோப்பினால் கழுவியபின் அந்தச் சந்தனப்படலைத் தேவையான விளக்கெண்ணையுடன் குழைத்துப்பின் மைச்சிமிழில் அடைக்கலாம். மையிட்டக்கண்ணோடு கண் நோக்கின் அங்குச்சொற்களுக்கு என்ன வேலை !
செயற்கை ஐ லைனெரை தூர வீசிவிட்டு கண்ணிற்கு மை எழுதுவோமா?
மெட்ராஸ் ஐ-யிலிருந்து விடுதலை பெறுவோமா?
No comments:
Post a Comment