Monday, August 19, 2013

வாதம்,பித்தம்,கபம்-முக்குற்றம்.

 வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். 
         உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. . இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
      “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும்.
       மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவு தெரிந்திருக்க வேண்டும். .
          ”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படுகிறது.
          
            இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். 

        பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. 


         கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. 
       இந்த மூன்று வாத பித்த கபமும்
 ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட  அவசியமானது.
      ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள்.
      இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். 
         . புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.
        மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
        வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில்  சேர்ப்பது வாதத்தைக் குறைத்திட உதவும்.

          பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். 
    அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் நீளும்..
   இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். 
      நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! 
     பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் 
       கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். 
    அரிசி சாப்பிடலாம்.கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.
    பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. 
     மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரணமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பளு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.
         அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. 
        பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.
       மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். 
      மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். 
       தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். 
        தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்றினையும் காப்பதில், சமையல்கூடத்திற்கு  பங்கு உண்டு.
   அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. 
      அதனை முட்டாள்தனம் என்றோ பழையது என்றோ ஒதுக்குவது கூடாது. அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். 
     ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். 
      அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது.
     இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

No comments:

Post a Comment