Showing posts with label சுவை. Show all posts
Showing posts with label சுவை. Show all posts

Tuesday, January 22, 2013

அறுசுவைக்கான உணவுகள்


நன்றி, அட்டமா வெளியிடு

நலம் தரும் உடனடி உணவு


நலம் தரும் உடனடி உணவு

நம் வீட்டுப் பெண்கள் அஞ்சரைப் பெட்டியில் அனைத்து நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்ற வீட்டு மருத்துவர்கள். பெண்கள் மீண்டும் தன் நிலை உணர்ந்து விழிப்படைந்தால்- கேடு தரும் உடனடி உணவுகளும், மசாலாக்களும் கடைவீதியில் இருந்து மறைந்து விடும்.

குழம்புப் பொடி 

மிளகாய் வற்றல் - நான்கு குவளை
து. பருப்பு - அரை குவளை
க. பருப்பு - கால் குவளை
உ. பருப்பு - அரை குவளை
மல்லி - ஒரு குவளை
மிளகு - மூன்று சிறு கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிறு கரண்டி
வெந்தயம் - நான்கு சிறு கரண்டி
உப்பு - தேவையான அளவு
சட்டியைக் காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு ஒவ்வொன்றையும் அரைத்து கலந்து கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.


கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை - ஒரு குவளை
உ. பருப்பு - நான்கு சிறு கரண்டி
க. பருப்பு - நான்கு சிறு கரண்டி
மிளகாய் வற்றல் - நான்கு
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
புளி - சிறிது
தேங்காய் துருவல் - அரை குவளை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ - ஒரு குவளை
மல்லி விதை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10 அயிரை(கிராம்)
மிளகு - 10 அயிரை
காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
பயன்- பித்தம் அமைதி பெறும். வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் தொலையும்.

பொட்டுக்கடலைப் பொடி
பொட்டுக்கடலை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10
தேங்காய் துருவல் - அரை குவளை
புளி - சிறிது
உப்பு - நான்கு சிறு கரண்டி 
பூண்டு - பத்து பற்கள்
முதலில் பொட்டுக்கடலையை இடித்து சலித்துக் கொள்ளவும். உரலில் மிளகாய் வற்றல், உப்பு, புளி இடித்து பின் தேங்காய் துருவல் சேர்த்து இடிக்கவும். பின் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

எள் பொடி
வெள்ளை எளை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - நான்கு 
மிளகு - சிறு கரண்டி
காயம் - சிறிது
உப்பு - இரண்டு சிறு கரண்டி
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும் பிறகு ஒன்றாக எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோற்றுடன பிசைந்து சாப்பிடலாம்.
இந்த கலவையை நீர் விட்டு மைய அரைத்தால் அது எள் துவையலாகும்.
இனிப்பு வகைகள்


கேழ்ப்பை உருண்டை
கேழ்வரகு மாவில் திட்டமாக நீர் ஊற்றி பிசைந்து அடையாக தட்டி தோயைக் கல்லில் சுட்டெடுத்து கொள்ளவும் தேவையான அளவு வறுத்த வேர்க்கடலை, வெல்லம் கலந்து இடித்து அல்லது கலக்கியில்(மிக்ஸி) அரைத்து உருண்டையாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
எள் உருண்டை
எள்ளை இலோசாக வறுத்து வெல்லம் சேர்த்து இடித்து உருண்டை பிடித்துத் தரலாம்.

பொரி அரிசி உருண்டை
அரிசியை வறுத்து பொடிக்கவும். உடைத்த கடலையை பொடி செய்து இவற்றுடன் வெல்லம் கூட்டி கலக்கவும்.சிறிது வெந்நீர் மாவில் விட்டு பிசைந்து உருண்டையாக்கித் தரவும்.

முளைவிட்ட பாசிப்பருப்பு
பாசிப்பருப்பை முன்னிரவே ஊறவைத்து மறுநாள் காலை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்து விட்டால், மாலைக்குள் நன்றாக முளைத்து விடும்.அதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம். பிள்ளைகளுக்கு வெல்லம் சேர்த்துத் தரலாம்.

புடலங்காய் பாற்கன்னல்(பாயாசம்)
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த்தும் புடலங்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும். வெந்த்தும் வெல்லம் பொடித்துச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். விரும்பினால் இதோடு பால் சேர்க்கலாம். வறுத்த முந்திரிப்பருப்பு, சிறுமணகம்(ஏலம்) சேர்க்கவும்,



அவல் உணவு வகைகள்
அவல் சோறு
அவல் - நான்கு குவளை
பச்சை உருளங்கடலை(பச்சைப் பட்டானி) - நான்கு குவளை
உருளைக்கிழங்கு துருவல் - ஒரு குவளை
இஞ்சி - இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் - ஆறு
மஞ்சள் தூள்  இரண்டு சிறு கரண்டி
பெருங்காயம்  இரண்டு சிறு கரண்டி
சீரகம்  இரண்டு சிறு கரண்டி
மல்லி விதை தூள்  இரண்டு சிறு கரண்டி
மிளகு  இரண்டு சிறு கரண்டி 
துண்டு செய்த மல்லிக்கீரை - ஒரு குவளை
முந்திரி பருப்பு - அரை குவளை
மஞ்சைப் பழம் - இரண்டு
நெய் -நான்கு சிறு கரண்டி உப்பு தேவைக்கேற்ப . மஞ்சள் தூள்பெருங்காயம்சீரகம்மல்லி விதை தூள், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு இவற்றை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு துருவல், பச்சை உருளங்கடலை ஆகயவற்றோடு அரை குவளை தண்ணீரும் சேர்த்து புரட்டிப், புரட்டி கால் மணி நேரம் வேக விடவும். வெந்த்தும் அவலைக் கொட்டிக் கிளறி அடுப்பை விட்டு இறக்கி முந்திரிப் பருப்பு, துண்டு, துண்டாக வெட்டிய மல்லிக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
அவல் நார்ப் பொருள் நிரம்பிய நல்ல உணவு. மலச்சிக்கல் தீர்க்கும் அருமையான மருந்து. எப்பொழுதும் முளைவிட்ட கார் அவலையே பயன்படுத்துங்கள். சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்.
நீரிழிவு பிணியாளர்களுக்கு அரிசி சோற்றுக்கு மாற்றான உணவாக அமையும். தேவைப்பட்டால் சிறிது வெல்லம் கலந்து சாப்பிடலாம். அல்லது சிறிது உப்பு கலந்தோ, கலவாமலோ சாப்பிடலாம்.

பலவகை அவல் உணவு செய்முறைகள்
இனிப்பு அவல்
முளைவிட்ட கைகுத்தல் அவல் கையளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும். பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தூள் செய்து சேர்க்கவும். அவல் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு ஊறவைக்கவும். உண்ணும் நேரத்தில் துருவிய தேங்காய்ப்பூ தூவி பரிமாறவும்.

சிறப்பு இனிப்பு அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி, பேரீச்சம் பழத்துண்டுகள், கற்பழவிதை, முந்திரிப்பருப்பு துண்டுகள் கலந்து வைத்து உண்ணவும். சுவையோ சுவை மிக அருமையாய் இருக்கும். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.விருந்தினர்கள் பாராட்டி உண்பார்கள்.
பால் அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து உண்ணலாம். சர்க்கரை பிணியாலர்களுக்கு மிகவும் நல்லது. ஊறின உடனே உண்ணலாம். சர்க்கரை கலவாத ஏனைய முறைகளை நீரிழிவு பிணியாளர்கள் பயன்படுத்தலாம்.
எள் அவல்
ஊறவைத்த அவலுடன் வெள்ளை எள், தேங்காய் பூத் துருவல்,சிறிதளவு வெல்லம் கலந்து உண்ணவும். இதன் மணம் நம்மைக் கவரும், கை, கால வலிகள் இருந்தால் உடனே நீங்கிவிடும்.
நெல்லி அவல்
ஊறவைத்த அவலுடன் முன் கூறியவாறு எள்ளுக்கு மாற்றாக நெல்லியைத் துருவிக் கொட்டி கலந்து உண்ணலாம்.
காய்கறி அவல்
ஊறவைத்த அவலுடன் பச்சைக் காய்கறிக் கலவை மிளகு, சீரகத்தூள் கலந்து உண்ணலாம்.
அவல் கன்னல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி,சிறிதாய் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகள்,சிறு மணகம் ஆகியவற்றை போதுமான அளவு கலந்து நன்கு ஊறிய பின் சாப்பிடவும்.

புடலங்காய் அவல்
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு தூய்மை செய்து அவ்விடத்தில் கார அல்லது இனிப்பு அவலைத் திணித்து அடைக்கவும், அப்படியே சாப்பிடத் தரலாம். ஆவியில் வேகவைத்தும் தரலாம். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

அவல் இன்னுருண்டை
வெல்லம், சர்க்கரை கலவாத முழுமையான இனிப்பு உருண்டை. எள், வேர்க்கடலை உலர் கொடிமுந்திரி, பேரீச்சம்பழம் அனைத்தையும் உரலில் இடித்து, உருண்டையாய்ப் பிடித்து வைக்கவும். குழந்தைகள் விரும்பிச் சுவைப்பார்கள். சக்கரைப் பிணி உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.
அவல் உப்புமா
ஊறவைத்த அவலுடன் எலுமிச்சம் பழச்சாறு அளவாய் கலந்து மிளகு, சீரகம் சேர்த்து உண்ணவும். வேகவைத்த குறுநொய் உப்புமாவை விடச் சுவையாய் இருக்கும். மாலை நேரங்களில் சிற்றுண்டியாய் செய்து சாப்பிடலாம்.
உலர் அவல் கலவை
தூய்மை செய்த அவலுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை,நாட்டுச் சக்கரை தேங்காய்ப்பூ கலந்து சாப்பிடலாம். எதேனும் கொறிக்க நினைப்பவர்க்கு இது ஏற்ற திண்பண்டம். மலச்சிக்கலுக்கு கைகண்ட மருந்து.
சுண்டல் அவல்
ஊறவைத்த அவலுடன் முளைவிட்ட பச்சைப்பயறு, வேர்கடலை அல்லது கொண்டைக்கடலை திட்டமான அளவில் கலந்து சாப்பிடச் சுவையாக இருக்கும். இடைவேளை உணவாக பயன்படுத்தலாம். ஊட்டமான உணவாக விளங்கும். காரச் சுவைக்கு மிளகு, சீரகத்தூள், இனிப்புச் சுவைக்கு வெல்லம் கலந்து கொள்ளவும்.

பழச்சாறு அவல்
பல்லணிப் பழம்(மாதுளை),கொடிமுந்திரி, சாற்றுக்கனி(சாத்துக்குடி) இவற்றில் ஏதேனும் ஒரு சாறு அவலில் ஓர் அங்குலம் மேலாக நிற்கும் அளவிற்கு தளும்ப ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவ்ம். சுவைக்கு தேவைப்படின் வெல்லம் சேர்க்கலாம். மற்றபடி எதுவும் கலக்காமல் உண்பது நலம்..அவலைச் சாப்பிடும்போது அதில் ததும்பி நிற்கும் சாற்றையும் ஒரு கரண்டியால் குடித்துக் கொண்டு சாப்பிட சுவை மிகும்.
மாம்பழ அவல்
மாம்பழம் கிடைக்கும் காலங்களில் ஊறவைத்த அவலுடன் மாம்பழத்தை சின்னச் சின்னதாய், செதில் செதிலாய் நறுக்கிப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். சுவையைப் பற்றி கூற வேண்டியதூ இல்லை.. பிள்ளைகள் விட மாட்டார்கள்.
செங்கொழுப்பை(பப்பாளி) அவல்
ஊறவைத்த அவலுடன் செங்கொழும்பைப் பழத்தை சிறு துண்டுகளாய் நறுக்கி போட்டு கலந்து உண்ணலாம். அல்லது பழத்தை நெடுக்காக பாதியாக வெட்டி அதனுள்ளிருக்கும் விதை மற்றும் வித்தினை அகற்றி அதில் ஊறின அவலைப் போட்டு ஒரு கரண்டி கொண்டு அவலையும் பழத்தையும் சுரண்டி கலந்து சாப்பிடலாம்.
கற்பழப் பருப்புப்(பாதாம் பருப்பு) பால் அவல்
கற்பழப் பருப்பை நான்கு எடுத்து சிறிது நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறிய பின் அந்நீரை அப்புறப் படுத்திவிட்டு பருப்பை மட்டும் மைய அரைக்கவும். அதனுடன் நீர் சேர்த்தால் பாலாகிவிடும். பாலை அவலில் ஊற்றி வெல்லம் கலந்து ஊறியபின் சாப்பிட அருமையாய் இருக்கும்.
மிளகு நீர் அவல்
வீட்டில் உணவுக்காக செய்யும் மிளகு நீர் அல்லது தக்காளி நீர் தூய்மை செய்த அவலில் தளும்ப ஊற்றி ஊறவைத்து அரைமணி கழித்து சாப்பிடலாம்.
உங்கள் சிறப்பு நலம்காக்கும் கைப் பக்குவத்தை- வீட்டு மருத்துவரே உங்கள் விருந்தினருடனும், பிற வீட்டு மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்வோம்...


Todays fact - அறுசுவை



இன்றைய அனுபவம்

இன்று காலை உணவு சாப்பிடும் முன் பெங்களூரிலிருந்து வசந்த்-ன் அழைப்பு. தனக்கு குடலிறக்க நோயால் உள்ள துன்பத்தைக் கூறி, இது முற்றிய நிலையில் இருக்குமோ இதை சித்த மருந்துகளால் சரிசெய்ய முடியுமா? என அஞ்சுவதாகக் கூறினார்.

நன்கு உணவைச் சுவைத்துச் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றேன். எப்படி சுவைத்துச் சாப்பிடுவது? என்றார். இது குறித்து அவருடன் பகிர்ந்து கொண்டவை.

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் மருந்து எனக் குறிப்பிடுவது இந்த சுவைத்தலையே. நான் இறைவழி மருத்துவம் என குறிப்பிடுவது இந்த சுவைத்தலையே. இறைவழிபாடாக நான் புரிந்து வைத்திருப்பதும் இறைவன் தந்த வாழ்வைச் சுவைத்தலே.

அதாவது,

அறுசுவை உணவைப் பசியறிந்து சுவைத்து உண்பவர்க்கு, இயல்பான நீரைத் தாகமறிந்து சுவைத்துக் குடிப்போர்க்கு எல்லா நலமும் கிடைக்கும். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

அறுசுவை உணவு

இனிப்புதுவர்ப்புகார்ப்புஉவர்ப்புபுளிப்புகசப்பு இவையே அறுசுவை. அறுசுவைகள் முறையே,மண், காற்றுநீர்ஆகாயம் நெருப்பு என ஐந்து மூலக சக்திகளைத் தன்னகத்தே கொண்டவை.
நமது உடலின் முக்கிய கருவிகள் பன்னிரண்டு அவை,
வயிறு, மண்ணீரல்பெருங்குடல், நுரையீரல்சிறுநீர்ப்பை. சிறுநீரகங்கள்பித்தப்பை, கல்லீரல்,சிறுகுடல், இதயம்உடல் வெப்பக் கட்டுப்பாட்டமைப்பு, இதய உறை – இந்த முக்கியக் கருவிகளின் கட்டுப்பாட்டில் உடல் முழுமையும் உள்ளது. மூளை இக்கருவிகளின் தேவைகளுக்காக இயங்கும் கருவியே. உடலின் நல்லது கெட்டது இந்த கருவிகளின் செயல் திறனைப் பொறுத்தே அமையும்.

இந்த பன்னிரண்டு முக்கிய கருவிகளும் முறையே ஐந்து மூலக ஆற்றல்களின் வழிபட்டவை.

இவற்றுக்குத் தேவையான சத்தியை அறுசுவைச் சத்தி மூலமாகவே பெறுகின்றன

நமது உணவில் இச்சுவைகளில் ஒன்றின் தன்மையுள்ள உணவு இல்லாவிடில் அந்த சுவையால் இயங்க கூடிய முக்கிய கருவியின் இயக்கத்துக்கு தேவையான  தூண்டுதலும் சத்தியும் கிடைக்காது. அதன் காரணமாக மொத்த உணவின் சீரணமும் சீர்கெடும்.

உதாரணமாக நாம் உண்ணும் உணவில் இனிப்புச் சுவை இல்லையெனில் வயிறு –மண்ணீரல்  இரண்டுக்கும் தேவையான இயக்க ஆற்றல் இருக்காது மேலும் இனிப்புச் சுவையைச் சீரணிக்கக் கூடிய சுரப்பிகள் எதுவும் சுரக்காது வயிறு மண்ணீரல் அனியமாக இல்லாத நிலையில் இரைப்பையின் உள்வரும் உணவினைச் சீரணிக்கத் தேவையான சுரப்பிகள் சரிவரச் சுரக்காமல் நீண்ட நேரம் இரைப்பையினுள் கிடக்கும் உணவு கெடும். அது அடுத்தடுத்துச் சாப்பிடும் பொழுது கட்டாயமாகத் தள்ளப்பட்டுக் கெட்ட சக்தியாக, கழிவாக மாறும்.

இந் நிலையில் சாப்பிட்ட உணவு தரமான உணவுச்சத்தியாக - குளுக்கோசாக மாறாது; கெட்ட உணவுச்சத்தியாக –கெட்ட குளுகோசாக மாறுகிறது. எனவே, இதை உடல் ஏற்றுக் கொள்வதில்லை, புறக்கணிக்கிறது.

அதாவது, உணவுச்சத்தியை செல்களுக்குக் கொண்டு சேர்க்கும் கணையநீர் சுரப்பதில்லை. தரமான உணவுச்சத்தியை மட்டுமே உடல் ஏற்றுக் கொண்டு கணைய நீரைச் சுரக்கும். இல்லையெனில், அதைப் புறக்கணித்துக் கழிவாக்கி வெளித் தள்ளிவிடும்.

இது போல் தான், அறுசுவைகளில் எந்த சுவை குறைந்தாலும் சீரணம் கெட்டுப்போகிறது. உடல் செல்களுக்குத் தேவையான உணவுச் சத்தி கிடைக்காததால் செல்கள் வலுவிழக்கின்றன. அதன் காரணமாகவே அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நமது உடலின் பல்லாயிரம் கோடி செல்களுக்கும் தேவையான உணவுச் சத்தியை, ‘அறுசுவை உணவுகளை சுவைத்து உண்பதால் மட்டுமே பெறமுடியும்.

பொருந்திய உணவு

நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்ற காரணிகளால் மாறுபடும் நம் உடல்த் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதே பொருந்திய உணவாகும்.
இயற்கையாக படைப்பாற்றல் தந்த உணவுகள் முழுமையானவை. இயற்கையோடு இயந்து வேளாண்மை செய்வோர் தரும் உணவு அமுதமே.
தாய்ப் பாலிலும், இளநீரிலும், எண்ணெய்களிலும், தண்ணீரிலும் சத்தைப் பிரித்தும், கூட்டியும் அந்த உணவுகளை நஞ்சாக்கும் நவீன அறிவியல்க் கோமாளிகளின் வழிகள் மிகத் தவறானது இது நலக்கேட்டை உண்டாக்குவது.

வணிகர்கள் நிலத்திலும் உணவுப்பொருள்கள் மீதும் கொட்டும் நஞ்சுகளால் விளைந்த பொருட்கள் உண்ணத் தகாதவை. இவர்கள் வீரியம் என்த் தரும் பொருட்கள் எந்த நலமும் தராத சுவையற்ற சொத்தையே இவை மலட்டுத்தனத்தையே மனிதரிடம் உருவாக்கும். இவற்றில் நம் உடல் செல்களுக்குத் தேவையான பொருட்கள் சத்துக்கள் இருப்பதில்லை.
நலவாழ்வை நாடுவோர் இயற்கையான, நஞ்சில்லா உணவுகளை, நீரை - படைப்பாற்றலுக்கு நன்றியுணர்வுடன் உண்ணுதல் வேண்டும்.

இந்த காலத்தில் இதுவெல்லாம் சாத்தியமா என புலம்பி ஒதுங்கிப் பயனில்லை. வேளாண்மை குறித்த சமூக விழிப்புணர்வும் மாற்றமும் நமது உடனடி- உயிர்த் தேவை.

பசியறிதல்

பசியும், தாகமும் உடலின் அடிப்படைத் தேவைகளில் உள்ளவை.
பசியும், தாகமும் செல்களுக்கான உணவுச் சத்தி தேவைகளை நமக்கு உணர்த்தப் படைப்பாற்றலால் ஏற்படுத்தப் பட்டவை.
மனிதன் தனது உணர்வுகளை மறுப்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். தனது உடல் அறிவுகளைப் புறக்கணித்துத் தன்னை உணர்வற்றவனாக  ஆக்கிக் கொள்கிறான்.

செல்களின் திரட்சிகளால் உருவான முக்கிய உறுப்புகள் தங்கள் தேவைக்கேற்ப சுவைகளைக் கேட்கிறது. குறிப்பிட்ட வகையான சுவையுள்ள உணவை சாப்பிடவும் நம்மைத் தூண்டுகிறது. அதே போல அதிகமாக ஒரு சுவை சேர்க்கப் பட்டாலும் அதை உணர்த்தி போதுமென்கிறது. இந்த உடலின் மொழியை அறிந்தவர்கள் மட்டுமே உடலை சுகமென்பர்; மற்றவர்கள் சுமையென்கின்றனர்.

உதாரணமாக, கர்ப காலத்தின் ஆரம்ப மாதங்களில் பெண்கள் புளிப்பில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம் வரப்போகும் குழந்தைக்கான நனமையாக தாயின் உடலை சுத்தமாக்குவதற்காக கல்லீரல், பித்தப்பைகளை நன்கு இயக்குவதற்காக அவற்றிற்கான சுவைகளை உடல் கேட்கிறது.

அது போல, உழைப்பு, வாழும் இடத்தின் சூழல், மனநிலை, உடலின் சத்திநிலை போன்ற பல காரணங்களால் பசி, தாகத்தில் வேறுபாடு இருக்கும். இவையெல்லாம் உடலின் அறிவு.

இந்த அறிவுக்கு ஒத்துப்போகாத மருத்துவர்களின் படிப்பறிவு கூறும் கருத்துக்களைக் கேட்டு, கருவிகளைக் கேட்டு உணவை அளந்து சாப்பிடுபவர்கள், தண்ணீரை அளந்து குடிப்பவர்கள் தங்கள் உடலுக்கு துரோகமிழைத்ததன் பலனை நோயாக அணுபவிக்கிறார்கள்.
பசித்து பின் அளவறிந்து உண்பவர்க்கு நோயோ, பத்தியமோ இல்லை.

சுவைத்து உண்ணுதல்

உணவின் சுவையை அறிந்து சுவைச்சத்தியாக மாற்றும் உறுப்பு நாக்கே. நாக்கைத்  தான்டி  உள்ளே போகும் சுவையால் பயனேதும் இல்லை. நாக்கில் சுவை சத்தி பிரிக்கப்படாமல் உள்ளே போகும் உணவு தொடர்புடைய முக்கியக்  கருவிகளைப் பாதிக்கும்.

மனிதனுக்கான சீரணம் குறித்த அறிவு, ‘விரலில் தொடங்கி நாக்கில் முடிகிறது’’ என்பர் பெரியோர். அதாவது பொருந்திய உணவைத்  தேர்ந்தெடுத்துச் சுவைத்து உண்ணுவதுடன் மனிதனின் அறிவு நின்றுவிட வேண்டும். அதறகு மேல் ஆக வேண்டியதை உடலின் அறிவு பார்த்துக் கொள்ளும்.

நல்ல பசியாலும், களைப்பாலும் சோர்ந்து போன ஒருவர் இரண்டு கவளம் உணவு சாப்பிட்டதும் தெம்பு பெறுவதும், அடுத்து, உடலுழைப்புக்குத் அனியமாகி விடுவதும் நாக்கில் பிரிக்கப்படும் சுவை சத்தியாலேயே. பசியுள்ளவர் நாக்கில் அறுசுவையும் பட்டவுடனே அச்சுவையுடன் சம்மந்தப்பட்ட உறுப்புகள் நாக்கினால் உறிஞ்சப்பட்ட சுவைச்சத்தியால் தூண்டப்பட்டு பலம் பெறுகின்றது.

வாயில் இட்ட உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு உணவுள் இருக்கும் சுவைகள் அனைத்தும் நாக்கால் உறிஞ்சப்பட்டு சப்பையான உடன் கூழாக இரைப்பையுள் இறங்கினால் ஏற்கனவே சுவைச்சத்தியால் அனியமாக்க்கப்பட்டு இருக்கும் சீரணச் சுரப்பிகள் சுரந்து சீரணம் முறைப்படும். அழகான முறையில் உடல்ச் செல்களுக்குத் தேவையான உணவுச்சத்தி கிடைக்கும் உடல் மகிழ்வுறும்.

அறுசுவை உணவு எல்லோர்க்கும் முடியுமா?

இங்கு நாம் கவணிக்க வேண்டியது இரண்டு.
1.       சுவை நாக்குக்குத் தான் வயிற்றுக்கல்ல. நாக்கில் சுவை பட்டாலே, அச்சுவை தொடர்புடைய உடலின் முக்கிய கருவிகள் வலுப்பெற்று அனியமாகின்றன.
2.      
சுவையின் தன்மையுள்ள உணவு என்பது வேறு. உதாரணம். தேன், இனிப்பாகத் தெரிந்தாலும் அதன் சுவைக்குணம் கசப்பு, நெல்லி புளிப்பாக தெரிந்தாலும் அதன் சுவைக்குணம் உப்பும், துவர்ப்பும் ஆகும்.
வீட்டில் சமைப்போர் சுவைக்குணம் பற்றிய அறிவினை வளர்த்துகொள்க. எல்லா நேரமும் விதவிதமாக சமைக்க முடியாது. அது போல் வீட்டில் உள்ள அனைவரின் சுவைத்தேவைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட்டுத்தான் இருக்கும் எல்லோருக்கும் தனித்தனியே சமைத்தல் முடியாது. எனவே, சமைப்போர் மென்மையான சுவையுடன் உணவுகளை செய்து வைத்துக் கொள்க.

சாப்பாட்டு மேசையில் இனிப்புக்காக நாட்டுச்சர்க்கரை, கசப்புக்காக சுன்டைக்காய் வற்றல், துவர்ப்புக்காக பேரீச்சங்காய் அல்லது மாவடு, புளிப்புக்காக எலுமிச்சை, காரத்துக்காக மிளகுசீரகப் பொடி, உவர்ப்புக்காக நெல்லிக்காய், வெள்ளரி போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். அந்தந்த பகுதியில் எளிதில் கிடைக்கும் பொருள்களை சுவைத்தன்மை அறிந்தவர் பயன்படுத்தலாம். சாப்பாட்டுத் தட்டிலெயே வைத்துவிடுவது இன்னும் சிறப்பு.

உடல்ச் செல்களின் தேவையால் தூண்டப்பட்ட சுவையுணர்வு காரணமாக எந்தச் சுவையை யார் நாக்கு நாடுகிறதோ அந்த சுவையை அவர்களாகவே தேவையான அளவு எடுத்துக் கொள்வர்.
வீட்டில் சமைப்பவர்களுடன் ஏற்படும் சுவை குறித்த சண்டைகளும் முடிவுக்கு வந்துவிடும்.

உணவுண்ணும் போது கவணிக்க வேண்டியவை
1.      
உடலினுக்கு தேவையான பொருந்திய உணவு.
2.       பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3.       வாயை மூடி நன்கு மென்று சாப்படுதல். வாயை மூடாமல் எவ்வளவு நேரம் மென்று கொண்டிருந்தாலும் உமிழ் நீர் சுரக்காது. உமிழ் நீர் கலக்காத உணவு தரமான உணவுச்சத்தியாக மாறாது.
4.       இந்த உணவில் இருந்து நன்மை பெறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.
5.       உணவு உண்ணும் போது பேசக்கூடாது. (பேச வாய் திறக்கும் போது உட்புகும் காற்று உமிழ் நீருடன் உணவை சேரவிடாது தடுத்து விடும். சீரணம் கெடும்.)
6.        
 கண்களுக்கும் வேறு வேலைகள் கொடுக்க்க் கூடாது.
7.       மன உணர்வுகளுக்கு (கோபம், வருத்தம், பயம் போன்ற) ஆட்பட்ட நேரங்களில் உணவருந்துவதை தவிர்க்க வேண்டும்.
8.       உணவருந்தும் போதும், முன்னும், பின்னும் தண்ணீர் தேவைப்படாது. ஏதேனும் காரணத்தால் தேவையெனில் மிக அளவாகப் பயன்படுத்தவும்.
9.       தாகம் வரும் போது மட்டும் தண்ணீர் அருந்துக.
10.   இயல்பான கிணற்றின் நீரே சிறப்பு.
11.   கொதிக்க வைத்த தண்ணீர் கூடாது.
12.   நவீன முறையில் சுத்தப்படுத்தப் பட்ட நீர் நஞ்சே.
13.   மண்பானை நீர் சிறப்பு.
14.   தண்ணீர் அருந்தும் போது வாயை மூடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
15.   சாப்பிடும் போதும், நீரருந்தும் போதும் தரையில் காலை மடித்து அமர்ந்து உண்ணுதல் வேண்டும்.
16.   நாற்காலியில் காலை தொங்கவிட்டபடி சாப்படுவது கூடாது.
17.   கை, கால் முகம் கழுவிய பின் உணவருந்தல் வேண்டும்.
18.   குளித்த பின் முக்கால் மணி நேரமாவது இடைவெளி விட்டு பின் சாப்பிடுதல் வேண்டும்.(உடல் வெப்பம் தன்னிலைக்கு வர வேண்டும்)
19.   சாப்பிட்ட உடன் குளித்தல் கூடாது. குறைந்த்து இரண்டரை மணி நேரமாவது இடைவெளி தேவை.

இந்த முறைகளை முறையாக பயின்று பழக்கமாக்கிக் கொண்டால் எந்த நோயும் வராது. வந்த நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கி விடும். எப்படியெனில்,

நமது உடல் பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. செல்களின் தொகுப்பே திசுக்களாகவும், திசுக்களின் தொகுப்பே உடல் கருவிகளாகவும், புலன் உறுப்புகளாகவும் உள்ளது. செல்களின் உறுதித் தன்மையைப் பொருத்தே உடல் அமைகிறது. நாம் உண்ணும் உணவு, நீர், காற்று, விண் என பல்வேறு சக்திகளும் நமது செல்களுக்குச் சென்றால் தான் செல்கள் அறிவுடனும், ஆற்றலுடனும் இயங்க முடியும். இதில் குறைவேற்பட்டால் வரும் தீமைகளை நீக்க வேறு வழிகள் இல்லை.

உடல்ச் செல்களுக்குத் தேவையான சத்திகளை முறைப்படுத்தலே உண்மை மருத்துவம். எனவே தான் ஆசான் திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் உணவுண்ணும் முறைகளை மட்டுமே சொல்லி மருத்துவத்தை முடிக்கிறார்.