இன்றைய வாழ்க்கையில் கல்வியானது நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் கற்பதாக இருக்கிறது. தேடுதல் உள்ள ஒருவன் இதன் மூலம் நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்வியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஒருவனது ஆளுமையையும் செயற்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியாது.
உதாரணத்திற்கு ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம். அப் பணிக்கு வருபவர் பட்டப் படிப்பு பெற்றிருப்பார். இதனால் அவருக்குத் தேவையான கல்வி அறிவு கிட்டியிருக்கும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அல்லது கல்வியற் கல்லூரியில் பெற்ற பயிற்சியால் ஆசிரியப் பணிக்கான பிரத்தியேக அறிவும் அவரிடம் வளர்த்திருக்கும். ஆனால் அவ்வாறு கற்ற யாவரும் சிறந்த ஆசிரியராக வருவதில்லையே! இது ஏன்?
ஆனால் அந்த நபரானவர் தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் ஒருவரது குண இயல்புகளையும், கற்பிக்கும் முறைமைகளையும், மாணவர்களுடன் உரையாடும் பாணியையும்; முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் போலத் தன்னையும் வளர்த்தெடுக்க முயற்சி எடுப்பாராயின் அவர் சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க முடியும். அதற்கு மேலாக அவரிடம் தனது சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமாயின் மேலும் உதவியிருக்கும்.
அர்ச்சுனன் துராணாச்சாரியிடமிருந்து வில்வித்தையைக் கற்றான். ஆனால் வில்வித்தையை மாத்திரமின்றி தனது ஆளுமையையும் அவனால் வளர்த்துக் கொள்ள முடிந்தது. துரியோதனனும் அவரிடமே கற்றான். ஆனால் அவனால் அவனது குண இயல்புகளும் பண்புகளும் சொல்லும்படியாக அமையவில்லை. அது குருகுலக் கல்வி முறை.
சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் அது ஒரு அற்புதமான முறை.
ஆனால் ஏகலைவன், துரோணாசாரியரிடம் நேரடியாகக் கற்று கொள்ளாமலே அர்சுணனை ஒத்த சிறந்த வில் வீரனாக மாறினான். இங்கு சிஸ்யர்கள் தங்கள் குருவின் வழிகாட்டலை வௌ;வேறு விதங்களில் பெற்றிருக்கிறார்கள்.
வழிப்படுத்தல் Mentoring
இன்று புதிதாக Mentoring பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான சரியான தமிழ்ப்பதம் எதுவென்று தெரியவில்லை. வழிப்படுத்தல் எனக் கொள்வோம். அதிக அனுபவமும் knowledge உள்ள ஒருவர் தன்னிலும் அனுபவமும் அறிவும் குறைந்த ஒருவரை சரியான வழியில் நெறிப்படுத்துவது எனச் சொல்லலாம். மாறாக அவரைப் பார்த்து, அவரிடம் கேட்டு, அவரிடமிருந்து தன்னைத்தானே நெறிப்படுத்துவதாகவும் இது அமையும். இது இன்றைய வகுப்பறைக் கல்வி போலவோ ரியூசன் போன்றதோ அல்ல.
இதில் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மற்றொருவருக்கு ஊட்டப்படுவதில்லை. மாறாக அவர் அதைத் தானாகப் பெற்றுக் கொள்ளுமாறு வழிப்படுத்தப்படுகிறார். சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கற்றல் உரையாடலுக்கு அப்பால், சவால்களை எதிர்கொள்வதையும் உள்ளடக்குகிறது.
வழிப்படுத்தல் என்பது பொதுவாக வழிநடத்துனர் Mentor மற்றும் mentee வழிப்படுபவர் ஆகிய இருவருக்கிடையேயான ஒருவகை உறவு எனலாம். ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாள் வரைக்கான உறவு அல்ல. தொடரும் உறவு, தங்கள் எதிர்பார்ப்பு நிறைவுறும் வரை தொடரும். ஆனால் இந்த இருவரில் எவராவது ஒருவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் எந்தவித மனக்கிலேசமும் இன்றி இடை நடுவில் கைவிடுவதும் சாத்தியமே.
வழிப்படுத்தலில் உள்ளடங்கும் இருவரும் பொதுவாக ஒரே துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வாணிபம் செய்பவர்கள் என எத்துறை சாரந்தவர்களுக்கும் இது பயன்படலாம்.
இது வழமையான ஒரு கல்வி முறையல்ல என்பதைக் கண்டோம். முறைசாரது அறிவைக் கடத்துவது இதுவாகும். பொதுவாக அறிவை மாத்திரமின்றி அவரது தொழிற் திறனை விருத்தி செய்வதாகவும் அமைகிறது.
தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும். தங்கள் துறையில் தமது விருப்பிற்கு உரிய ஒருவரைப் போல தங்களைத் தானே வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவும் காணலாம்.
வழிப்படுத்தலில் அவதானிக்க வேண்டியவை
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலை வேலை செய்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் அவை தொழில் முறைப் போட்டி பொறாமைகள், சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தல் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லக் கூடுமாதலால் வௌ;வேறு இடத்தைச் சேர்ந்தவர்களே விரும்பத்தக்கது.
இரகசியம் பேணுதலும் நம்பிக்கையாக நடத்தலும் மிக முக்கியமாகும். வழிநடத்துனரும், வழிப்படுபவரும் சந்தர்பத்தை பயன்படுத்தி மற்றவரது வாய்ப்பு, வசதி, உழைப்பு போன்றவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடாது.
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் பொதுவாக சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். நேரம் அவர்களுக்கு பொன்னானது. எனவே மற்றவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காது வழிப்படுபவர் முன்முயற்சி எடுத்து பயன்பெற முனைய வேண்டும்.
அத்துடன் எழுதுவதிலும் ஏடுகளை பேணுவதிலும், நேரடியாகச் சந்திப்பதிலும் நேரத்தை செலவழிக்காது, டெலிபோன் உரையாடல், ஈ மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமே.
தொழிற்துறைகளில் வழிநடத்தல்
வழிநடத்துதல் என்ற பெயர் இல்லாவிட்டால் கூட பெரும்பாலான தொழில்களில் இது ஏற்கனவே செயற்படுகின்றது. தங்கள் தொழில் சார்ந்த கல்வித் தேர்ச்சி அல்லது பட்டப் படிப்புற்குப் பின்னர் தங்கள் தொழிலில் அனுபவமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவரிடம் பயிலுனராக இருக்க வேண்டிய கட்டாயம் சில தொழில்களில் உள்ளது. சட்டத்தரணிகள், கணக்கியலாளர்கள் போன்றவர்கள் உதாரணங்களாகும். இவர்கள் அவ்வாறு பயிற்சி பெறாது தொழில் செய்ய முடியாது.
இத்தகைய பெரும் தொழில்களில் மட்டுமின்றி சாதாரண மேசன், தச்சுத் தொழில் போன்றவற்றில் கூட தகுதியானவரின் கீழ் தொழில் பயிலுனராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் அல்லாது போனாலும் அவசியமாகவே உள்ளது.
மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் உள்ளக பயிற்சி (Internship) பெற்ற பின்னரே வைத்தியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
அதற்கு அப்பால் சத்திரசிகிச்சை, பொது மருத்துவம், சருமநோய், மகப்பேற்று மருத்துவம், புற்றுநோய், போன்ற எந்த விசேட மருத்துவத் துறையையாவது தேர்ந்தெடுக்கும்போது அதற்கான விசேட பட்ட மேற்படிப்பு (Post graduate course) கற்கை நெறிகளுடன், அத்துறை சார்ந்த நிபுணரின் கீழ் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயமாகும். ஆனால் முற்று முழுதாக வழிநடத்தல் என்று கொள்ள முடியாது. பாட நெறியோடு இணைந்தது.
குடும்ப மருத்துவத் துறையில் வழிநடத்தல்
பெரும்பாலான மக்கள் நோயுறும்போது முதலில் அணுகுவது தங்கள் குடும்ப மருத்துவரைத்தான். தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் நீண்ட காலமாக நெருக்கமாக அறிந்திருப்பதால் அவர் தங்களை அக்கறையோடு பார்ப்பார் என்ற நம்பிக்கையோடு நோயாளர்கள் அவர்களை நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.
ஆனால் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் அத்தகைய பயிற்சிகள் கிடைக்pன்றனவா?
கசப்பான உண்மை இல்லை என்பதேயாகும். பட்டப் படிப்பை முடித்து மருத்துவராக வெளியேறிய மறுநாளே குடும்ப மருத்துவம் என்ற துறையை எந்த மருத்துவரும் இலங்கையில் தேர்ந்தெடுக்க முடிகிறது. விரும்பிய இடத்தில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இது முடியாது. குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பின்னரே குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
இலங்கையிலும் குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பட்ட மேற்படிப்புகளும், டிப்ளோமாக்களும் உண்டு. MD(Family medicine), DFM (Diploma in family medicine), MCGP (Member of college of general practioners)போன்றவை இங்கு உண்டு. இவற்றில் முதல் இரண்டும் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. மூன்றாவதான MCGP குடும்ப மருத்துவ கழகத்தினால் நடாத்தப்படுகின்றன. இவை யாவும் அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளாகும். இவை குடும்ப மருத்துவர்களுக்கான பாட நெறிகளாகும். ஆனால் இவை இல்லாமலும் குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
இப்பொழுது இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் தாங்கள் நடத்தும் MCCP பயிற்சியின் அங்கமாக வழிநடத்தலை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இலங்கையில் மருத்துவ கற்கை நெறிகளில் Mentoring எனப்படும் வழிநடத்தல் முதல்முதலாக இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வழிநடாத்தலில் உருவாகும் புதிய குடும்ப மருத்துவர்கள் தாங்கள் தொழிலை ஆரம்பிக்கும் நாள் முதலே நோயாளிகளை அன்புடனும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் நடத்துவர்கள், அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் வழிநாடாத்தல் முக்கிய அங்கமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை
குழந்தைகளில் வழிநடத்தல்
இது தொழிற்துறை வழிகாட்டல் போன்றதல்ல.
குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர்களினதும் குடும்ப மூத்தோர்களின் ஆசிரியர்களினதும் பணியாக காலாகாலமாக இருந்து வருகிறது. வழிநடத்தல் என்ற பெயரை உபயோகிக்காமலே நாம் இதைச் செய்து வருக்கினறோம்.
ஆனால் சில குழந்தைகளுக்கு விசேட வழிநடத்தல் தேவைப்படுகிறது. சண்டை சச்சரவு குழப்பம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள், பாடசாலையில் பின்தங்கிய பிள்ளைகள், சமூக ஊடாடலில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு இவை அவசியம். உணர்வு பண்பாட்டியல் ரீதியான வழிநடத்தல் அக் குழந்தைகளுக்கு தேவைப்படும். சில மேலை நாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அப்பழுக்கற்ற மனதுடைய அக் குழந்தைகள், வழிநடத்துனரை தங்களது இலட்சிய புருஷனாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். அவர் பாதையில் தாங்களும் தொடர முனைவர். எனவே வழிநடத்தினராக இருப்பவர் நற்பண்பு நற்குணம் உடையவராக, தன்னலம் கருதாதவராக, சமூக உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இதைத் தொழிலாகக் கருதாது தொண்டாகக் கருதி குழந்தைகளை வழி நடத்த வேண்டும்.
போதகர் மாணவன் என்ற நிலை போலன்றி நட்புணர்வுடன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் மனம் திறந்து பேசுவதுடன் .தங்களிடம் மறைந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரவும் முடியும்.
நீங்கள் ஒவ்வொருவருமே உங்கள் தேவைக்கு ஏற்ப வழிநடத்துனர் ஆநவெழச அல்லது அநவெநந வழிப்படுபவர் ஆக உங்களை அறியாது ஏற்கனவே செயற்பட்டிருக்கக் கூடும். வழிப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால் அதை மேலும் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
No comments:
Post a Comment