Tuesday, October 1, 2013

மிகப் பிரமாண்டமான மூலிகைத் தோட்டம்


Rate this (1 Vote)
37034_524349037622684_1192033093_nமிகப் பிரமாண்டமான மூலிகைத் தோட்டம்
——————————————————-
கோத்தகிரி அருகே 6 ஆயிரம் வகையான மூலிகை செடிகள் கொண்ட பிரமாண்டமான மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கையை மனிதன் அழிக்க துவங்கியதால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளில் மூலிகை செடிகளின் அழிவும் ஒன்றாகும். இத்தகைய அழிவுகளால், நமது நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மூலிகை செடிகளே மீதமுள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூலிகை செடிகளை கொண்டு உற்பத்தி செய்யும் மருந்துகள் யுனானி,சித்தா,ஓமியோபதி, ஆயுர்வேதம், அலோபதி என்ற பிரிவுகளாக நமக்கு பயனளித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் பல உயிர்கொல்லி நோய்களுக்கும் மூலிகை தாவரம் தான் அருமருந்தாக பயன்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகை செடிகளை பாதுகாத்து, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வகையில், 60 வயதை கடந்த, பேராசிரியர் டாக்டர். ஏ.எஸ்.எச். ரஹ்மான் என்பவர் முழு முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஊட்டி – கூக்கல்தொரை சாலையில் தீனட்டி கிராமத்துக்கு செல்லும் வழியில் 4 ஏக்கர் பரப்பளவில் மூலிகை தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார்.
இதில், நமது நாட்டில் அழிந்துப்போன மூலிகை செடிகளை கூட, 55 நாடுகளில் இருந்து சேகரித்து, தனது தோட்டத்தில் பராமரித்து வருகிறார்.உலகில் எந்த நாட்டில், எந்த சீதோஷ்ண நிலையில் வளரும் தாவரங்களாக இருந்தாலும், தனது தோட்டத்தில் செழிப்பாக வளர அதற்கான காலச்சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
இவரின் மூலிகை பசுமைக்குடிலில், 547 வகையான மூலிகை தாவரங்களை வளர்த்து வருகிறார். இதில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான “கோஸ்டம்’ இமயமலையில் இருந்தும், மனநோய்க்கு அருமருந்தான”ஸ்டிங்கிங் நெட்டில்’ ஐரோப்பாவில் இருந்தும்,திக்குவாயை குணப்படுத்தும் “அகில்கரா’ உட்பட அரியவகையான 6 ஆயிரம் மூலிகை செடிகளை தனது பண்ணையில் வளர்த்து வருகிறார்.
இது குறித்து டாக்டர் ரஹ்மான் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளாக மூலிகை செடிகளை வளர்த்து வருகிறேன். பல இடங்களில் நான் மருத்துவராக பணியாற்றி இருந்தாலும், மூலிகை செடிகளை கொண்டு நோய்களை குணப்படுத்துவது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு மூலிகை செடியில் 300 குணங்கள் உள்ளன.இங்கு வருபவர்களுக்கு மூலிகை குறித்த பயனை கூறுவதுடன், யோகா போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. நீலகிரியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மூலிகை தாவரங்கள் கொண்ட பண்ணை உள்ளது என்பது இங்குள்ள மக்களுக்கு பெருமையாகும். இப்பண்ணையை இதற்கு மேலும் பெரிய நிறுவனமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். இவ்வாறு டாக்டர் ரஹ்மான் கூறினார்.

1 comment:

  1. டாக்டர்.ரஹ்மான் தொடர்பு எண் கிடைக்குமா...என் பெயர் டாக்டர்.கே.பாபு-அலைப்பேசி எண்: 8122222111.

    ReplyDelete